சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலையாகி பெங்களூருவில் இருந்து சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்லார். பெங்களூருவில் இருந்து சென்னை வரை 12 இடங்களில் சசிகலாவை வரவேற்று பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாசொத்துக் குவிப்பு வழகில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைவாசத்தை அனுபவித்தார். சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருந்த நிலையில், சிறையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பெங்க்ளூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருடைய தண்டனைக் காலம் முடிவடைந்ததால் மருத்துவமனையில் இருந்தபடி விடுதலை செய்யப்பட்டார். சசிகலா உடல் நலம் தேறிய நிலையில், அவர் நட்சத்திர விடுதி ஒன்றில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
சசிகலா மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகி புறப்படும்போது அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்டு தனது அரசியல் வானவேடிக்கையை தொடங்கிவிட்டார்.
சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்கள் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.
சசிகலா விடுதலையானால் அதிமுகவில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் அதிமுகவில் இருந்து பல பேர் அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று அரசியல் விவாதங்கள் நடைபெற்று வந்தது.
சசிகலா விடுதலையானதுமே அவருக்கு ஆதரவு தெரிவித்து வரவேற்று அதிமுக நிர்வாகிகள் பலரும் சுவரொட்டி, பேனர்கள் வைத்தனர். அவர்கள் அனைவரும் அதிமுக தலைமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
சசிகலா பெங்களூருவில் குவாரண்டைனை முடித்துவிட்டு பிப்ரவரி 7ம் தேதி தமிழகம் வருவார் என்றும் அவர் நேராக சென்னைக்கு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால், நல்ல நாள், நல்ல நேரம் போன்றவற்றில் நம்பிக்கைகள் காரணமாக, சசிகலாவின் சென்னை வருகை நாள் பிப்ரவரி 8ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
சசிகலா பிப்ரவரி 8ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வரும்போது பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அமமுக ஏற்பாடு செய்துவருவதால் சசிகலாவின் வருகை பெரும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சசிகலா சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ள தகவலும் வெளியானது. இதனால், சென்னையில், சசிகலா வரவேற்பு நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி அளிப்பதில் சிக்கல் எழுந்தது.
சசிகலா பெங்களூருவில் இருந்து வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வர உள்ளதால் அவருக்கு வரும் வழியேல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அமமுக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில்தான், முன்னாள் அமைச்சரும் அமமுக துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில், சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும், பேரணி நடத்தவும் அனுமதி கேட்டு சென்னை காவல் துறையில் மனு அளிக்கப்பட்டது. சசிகலா தலைமையில் நடத்தப்படும் பேரணியில் 5,00க்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி அளித்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக எல்லையான அத்திப்பள்ளி முதல் சென்னை இல்லம் வரை வரவேற்பை கவனத்துடன் அமைத்து கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் இல்லாமல் வரவேற்பு நடத்தப்பட வேண்டும். என்று சசிகலா தமிழகம் வரும் நாளை மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் நாளாக மாற்றிடுவோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.
இருப்பினும், சசிகலா வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி தருவது பரிசீலனையில் உள்ளது என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வல் தெரிவித்துள்ளார்.
சசிகலா பிப்ரவரி 8ம் தேதி சென்னை வரும்போது அவரை அதிமுக பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் அவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா தனது காரில் அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.