/indian-express-tamil/media/media_files/2025/10/14/nainar-nagendran-2025-10-14-08-51-10.jpg)
கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், "தமிழரைத் துணை ஜனாதிபதியாக ஆக்கிய பெருமை பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் உண்டு. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, இங்கு பணியாற்றிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் முதன்முறையாக வரும் 28ஆம் தேதி கோவைக்கு வருகை தரவுள்ளார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து கொடிசியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வார். பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். அதன் பிறகு பேரூர் தமிழ்க் கல்லூரியில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு, மாலை 4 மணிக்குத் திருப்பூருக்குச் செல்வார். கோவையின் மத்திய பகுதியான டவுன்ஹாலில் தேசப்பிதா மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துவார்.
தஞ்சை டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முதல்வர், டெல்டா மாவட்டத்தைப் பற்றி அக்கறை காட்டாமல், பெயருக்கு மட்டும் உரிமை கொண்டாடுகிறார். கிட்டதட்ட 12 லட்சம் ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அறுவடை செய்த நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது நெல்லில் 25 சதவீதம் ஈரப்பதம் உள்ளது.
உடனடியாகக் கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். ஆனால், கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கேட்பதாக வீடியோக்கள் வைரலாகின்றன. நெல்லை ஒழுங்காகப் பாதுகாக்க அரசாங்கத்தால் முடியவில்லை. நீரில் மூழ்கி முளைத்த பயிர்களை இ.பி.எஸ் சென்று பார்த்த வீடியோவைத் தானும் பார்த்ததாகவும், அரசு நிர்ணயம் செய்வதை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், 25 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பருவமழை அறிகுறிக்கு முன்னதாக ரூ.950 கோடி கொடுப்பதாகவும், தமிழகத்திற்கு முன்னதாகவே வழங்கியதாகவும் கூறினார். முதல்வர் 95 சதவீதம் வேலை முடிந்துவிட்டதாகக் கூறுவார். உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கேட்டால், ஏற்கனவே ரூ.5,000 கோடி செலவழித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். மழை இப்போதுதான் ஆரம்பிக்கப் போகிறது, ரூ.5,000 கோடி எங்கு செலவழித்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். கால்வாய்களுக்கு ரூ.2,500 கோடி, தண்ணீர் தேங்காத இடங்களில் ரூ.1,500 கோடி, பிறகு ரூ.1,032 கோடி என கணக்குகளைக் காண்பிப்பதாகவும், மீதி ஐயாயிரம் கோடி எங்கு செலவு செய்தார்கள் என்று முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நியாயமானது. தேர்தல் அறிக்கையில் கூறியதை எதுவும் செய்யவில்லை. பழைய ஓய்வூதியம் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தார்கள். நான்கு மாதங்களே தேர்தலுக்கு உள்ளது. மத்திய அரசு கொடுக்கின்ற பணத்தை வேறு வழிகளில் செலவழித்துவிட்டு, மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறுகிறார்கள். இந்த அரசு ஒட்டுமொத்த மக்கள் விரோத அரசாங்கம். துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்சனை, மகளிர் உரிமைத் தொகை இன்னமும் கொடுக்கிறோம் என்கிறார்கள்.
துணை முதல்வர் பெங்களூர் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து செல்வதாகக் கூறுகிறார்கள். ஆனால், இன்னும் இங்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் அறிக்கையில் ரூ.1,000 தருவதாகக் கூறினார்கள், ஆனால் யாருக்குத் தருவார்கள், தகுதியுடைய பெண்களுக்கு என்று கூறியதாகவும், பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவது தி.மு.க.வின் கைவந்த கலை என்றும், வெகுவிரைவில் இந்த அரசாங்கம் வீட்டிற்குப் போகும் காலம் நெருங்கிவிட்டது என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் கேட்கின்ற கேள்விகளுக்கு அமைச்சர் கூறுகின்ற பதிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொழில் துறையைப் பற்றி வெள்ளை அறிக்கையை பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கேட்டதற்கு, அமைச்சர் வெள்ளை பேப்பரைக் காண்பித்து, இதுதான் வெள்ளை அறிக்கை என்று விளையாட்டுத் தனமாகக் கூறினார். கரூர் விவகாரத்தைப் பொருத்தவரை, விஜயாக இருந்தாலும் சரி, எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தவறு எங்கு இருந்தாலும் பா.ஜ.க. சுட்டிக்காட்டும்.
தீபாவளிப் பண்டிகையை அனைவரும் கொண்டாடி இருப்பீர்கள். ஆனால், தமிழக அரசு செய்த சாதனை 790 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.200 கோடி அதிகமாக மது விற்பனை செய்துள்ளது. இதுதான் தமிழக அரசின் சாதனை. இதனால் மக்களுக்கு ஏற்படும் வேதனை வெகு விரைவில் மாற்றி அமைக்கப்படும். கேரளா அரசு மக்கள் நலனிலும், மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்திலும் அக்கறையுடன் உள்ளது. கேரளா முதல்வர் பத்தாயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு பணத்தை துறைமுகத் திட்டத்திற்கு வாங்கிச் சென்றுவிட்டார். அவர் எதிராக இருந்தாலும், மக்கள் நலனில் அக்கறை உள்ளதைக் காட்டுகிறது”. குடியரசுத் தலைவர் பயணித்த ஹெலிகாப்டர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.