தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், இன்று இரண்டாம் கட்ட வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
வாக்காளர் பட்டியல்:
செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக, கடந்த 9ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், இன்று 2வது கட்டமாக, தமிழகத்தில் உள்ள 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு முகாமை அந்தந்த பகுதியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.வழக்கமாக பிரதான கட்சிகள்தான் இந்த முகாமில் பங்கேற்று, பெயர் சேர்த்தல், நீக்க விண்ணப்பங்களை வாங்குவர். இந்நிலையில், முதல் முறையாக வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நேற்று நடந்த முகாமில், காலை முதல் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களுக்கு வேண்டிய விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர்.