Voters can edit the details of voter: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தலை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர்களே மேற்கொள்ளும் புதிய திட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் ஒருவர் வாக்காளர் பட்டியலில் உள்ள தனது பெயர், முகவரி, வேறு ஏதேனும் தகவல்கள் திருத்தம் செய்ய வேண்டுமானால் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று அல்லது அது தொடர்பாக அரசு நடத்தும் முகாம்களுக்கு சென்று பாரங்களை பூர்த்தி செய்து அதை திருத்துவது என்பது வாக்காளர்களைச் சோர்வடையச் செய்வதாக இருந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை தாங்களே திருத்தம் செய்துகொள்ள அனுமதிக்கும் திட்டம் பற்றி தேர்தல் ஆணையம் விவாதித்து வந்தது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர்களே மேற்கொள்ளும் திட்டம் குறித்து தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரத சாகு, “வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்தை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக, வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி ஆகிய விவரங்களை வாக்காளர்களே திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் என்.வி.எஸ்.பி என்ற தனியான ஒரு இணையதளம் மற்றும் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இணையதளம் அல்லது செயலியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து திருத்தங்களை செய்யலாம். இந்தத் திருத்தங்களுக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு பாஸ்போர்ட், வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, நிரந்தர கணக்கு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை வாக்காளர்கள் பதிவேற்றலாம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சத்யபிரத சாகு, இணையம் அல்லது செயலியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் தொடர்பாக வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் நேரில் கள ஆய்வுக்கு சென்று திருத்தங்களை உறுதிப்படுத்துவர். அதன் பின்பு, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்படும். இந்த புதிய திட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறினார். மேலும், வாக்காளர் வரைவுப் பட்டியல் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இந்தப் பட்டியலில் உள்ள திருத்தங்கள், ஆட்சேபனைகளை வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாக்காளர் தெரிவிக்கலாம். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று சத்யபிரத சாகு கூறினார்.