வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த முகாம் : தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், இன்று மூன்றாம் கட்ட வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்யும் முகாம் நடைபெறுகிறது.
செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். வருகிற ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக, கடந்த மாதம் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், இன்று 3வது கட்டமாக, 67 ஆயிரத்து 654 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
புதிய வாக்காளர் சேர்ப்பு, முகவரி மாற்றம் செய்வது எப்படி?
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (அதாவது 01.01.2000-ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஒரே சட்ட மன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபடிவம் 8-ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை வாக்காளர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பொது மக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்ப்பிக்கவும் செய்யலாம். மேலும் பொது மக்கள் இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம்.
25 வயதுக்குட்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளிச்சான்றிதழ்களின் நகல்களை வழங்க வேண்டும் என்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் சேர படிவம் 6-ஐ பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் election.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.