BJP Tamil Nadu: தமிழக பாஜகவின் புதிய மாநில துணை தலைவர்கள், பொது செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் மொத்த பட்டியலை தமிழக பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இத்தேர்வு நடந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் செய்துள்ளார்.
அதன்படி, திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, உடனடியாக, சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவர் பாஜகவின் துணைத்தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வந்தது. அது தற்போது அதிகாரப்பூர்வமாகியிருக்கிறது.
அதோடு, பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனும் தமிழக பாஜக துணைத்தலைவராக, அக்கட்சியின் தலைவர் எல்.முருகனால் நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அதோடு, செய்தி சேனல் விவாதங்களில் பிரபலமான ராம சுப்பு தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி பெற்றுள்ளார். இவர்களை தவிர சினிமா பிரபலங்களான நமீதா, கௌதமி, குட்டி பத்மினி மற்றும் மதுவந்தி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பற்றிய விபரத்தினை தமிழக பாஜக, தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”