வக்பு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காததற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு, சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் வக்பு வாரிய சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படும் பொழுதே பலத்த எதிர்ப்புகள் உருவானதைத் தொடர்ந்து இச்சட்டம் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (JPC) அனுப்பப்பட்டது.
அதன்படி ஜே.பி.சி குழு அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று, அந்தந்த மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகளை பெற்று வருகிறது. அதன்படி, நாளை (30.9.2024) திங்கட்கிழமை தமிழ்நாட்டில், சென்னையில் ஜே.பி.சி கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த உள்ளதாகவும், இக்கூட்டத்தை ஸ்டாலினின் திமுக அரசின் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஏற்பாடு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் இருக்கும் சாதக பாதகங்கள் பற்றி இஸ்லாமியர்கள் தான் முழுமையாக உணர்ந்து சொல்ல முடியும். எதையும் போட்டு குழப்புவதையே தொழிலாகக் கொண்ட ஸ்டாலினின் திமுக அரசு ஜே.பி.சி கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு இன்று வரை (29.9.2024) அதற்கு ஆதரவான ஒரு சில அமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு அனுப்பிவிட்டு, பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, எஸ்.டி.பி.ஐ, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம், ஜமாத் இஸ்லாமிய இந்த், தேசிய முஸ்லிம் லீக், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, மனித நேய ஜனநாயகக் கட்சி போன்ற இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஜே.பி.சி கூட்டத்திற்கு அழைப்பு இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க கடுமையாக எதிர்க்கிறது.
இச்சட்டத் திருத்தம் இஸ்லாமிய மக்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள அடிப்படை உரிமையையே தகர்த்து எறிவதாக உள்ளதால், உடனடியாக இச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மேலும், பெரும்பாலான இஸ்லாமியர் நலம் காக்கும் அமைப்புகளை இந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு அழைக்காமல் ஸ்டாலினின் தி.மு.க அரசு புறக்கணித்துள்ளது இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள துரோகமாகும். இந்த அரசின் ஓரவஞ்சனை செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துக்களை நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் எடுத்துரைக்க வாய்ப்பளிக்காத ஸ்டாலினின் திமுக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.