வரலாறு படித்தவருக்கு, ‘வாக்கி டாக்கி’ தெரியுமா? - சென்னை உயர் நீதிமன்றம்

வாக்கி டாக்கி விவகாரத்தில் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வாக்கி டாக்கி விவகாரத்தில் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தமிழக காவல் துறை மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த செந்தில். முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது:

வாக்கி டாக்கி, காவல்துறையினரின் தகவல் தொடர்புக்கான கருவி. இவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 கேள்விகளை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார்.

வாக்கி டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது.
மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.

2017-18 ஆம் ஆண்டில் காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி 47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டு 10 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக மொத்தம் 83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வெறும் 4000 வாக்கி-டாக்கிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

அனுமதிக்கப்பட்ட தொகைக்கும் கூடுதலாக ஒப்பந்த வழங்கியது மிகப்பெரிய விதிமீறலாகும். அதுமட்டுமின்றி பெருமளவில் ஊழலும் நடைபெற்றுள்ளது. தமிழக அரசு ஒதுக்கிய 47.56 கோடியில் வாக்கி டாக்கிகள் அதாவது ஒரு வாக்கி-டாக்கி 47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாக்கி டாக்கியின் விலை 47,560 என்பதே வெளிச்சந்தை விலையை விட மிக மிக அதிகம் ஆகும்.

ஆனால், அதைவிட மிகவும் அதிகமாக ஒரு வாக்கி டாக்கி  2 லட்சத்து 8 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறது. ஆனால், 83.45 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ள நிறுவனத்திற்கு, ஒப்பந்தம் பெறுவதற்கான அடிப்படைத் தகுதியான தகவல் தொடர்பு கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான உரிமம் கூட இல்லை. அந்த உரிமத்தை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வாங்கித் தருவதாக அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்ததை ஏற்று இந்த ஒப்பந்தத்தை காவல்துறை வழங்கியிருக்கிறது.

இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது, எனவே இதுகுறித்து டிஜிபி மீது நடவடிக்கை எடுக்ககோரி தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘முதுநிலை வரலாறு படித்துள்ள மனுதாரருக்கு வாக்கி டாக்கி குறித்த போதுமான அறிவோ, நிபுணத்துவமோ இல்லை. விலை நிர்ணயம் தொடர்பாக அவர் எந்த நிபுணத்துவமும் பெறவில்லை.

மேலும் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள் மற்றும் செவி வழியில் கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு பணத்தை வீணடிக்கக்கூடாது என்ற எண்ணம் குடிமக்களுக்கு இருப்பது நல்லது, என்றாலும் வேறு பத்திரிக்கை செய்தி மட்டும் ஆதாரமாக ஏற்க முடியாது. வெறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மட்டும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. இது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close