கோவை ரத்தினபுரி பகுதி ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி கார்த்தியாயினி. ஐந்து வீடுகள் உள்ள லைன் வீட்டில் அவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின்புறம் சுமார் 21 சென்ட் நிலம் உள்ளது.
அங்கிருந்த பழைய கட்டிடத்தை இடித்து தூய்மைப்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்களான மூன்று பேர் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இரண்டு வீடுகளுக்கும் இடையில் உள்ள பொதுசுவரின் மறுபுறத்தில் பழைய கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த சுவரின் பாகங்கள் பாட்டியின் இல்லம் உள்ள பகுதியில் விழுந்துள்ளது.
அதேசமயம் மூதாட்டி கழிவறைக்கு சென்று திரும்பிய போது சுவரின் சில கற்கள் மூதாட்டியின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
![04 at 10.33.23](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/12/04/kqbLYsJLKHVmljo2e8eS.jpeg)
இதையடுத்து தகவலறிந்து வந்த அப்பகுதி மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், ரத்தினபுரி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேசமயம் கட்டிடத்தை இடிக்க வந்த ஜேசிபி ஓட்டுநர் மற்றும் நிலத்தின் உரிமையாளர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரத்தினபுரி காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“