அன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி! பொங்கும் செயல்பாட்டாளர்கள்

'சுந்தரவள்ளி மீது பிணையில் வெளிவர முடியாத நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது காவல்துறை. இது கருத்துரிமைக்கு எதிரான கசையடி'

By: October 26, 2018, 7:16:05 PM

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சுந்தரவள்ளி மீது பிணையில் வெளிவர முடியாத நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது காவல்துறை. இது கருத்துரிமைக்கு எதிரான கசையடி என எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ள நிலையில், இவ்விவகாரத்தின் பின்னணி குறித்து த.மு.எ.க. சங்கத்தினரிடம் பேசினோம்.

‘வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா’ கட்சியின் சார்பில் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் கடந்த அக்டோபர் 12-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. ‘பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக எதிர்ப்பு’ என்கிற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரன், பேராசிரியர் காரல் மார்க்ஸ், டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுந்தரவள்ளியும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

கூட்டத்தில் சுந்தரவள்ளி பேசியபோது அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். உச்சபட்சமாக, “பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தின் மீது ஆளுநர் கை வைத்தபோதே, அவர் கையை வெட்டியிருக்க வேண்டும்!” என ஆவேச வார்த்தைகளை அள்ளி வீசியது தான் வழக்குகள் வந்து நிற்க காரணமாகிவிட்டது. திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையிலும், இதே போன்றதொரு வேறொரு கூட்டத்தில், சுந்தரவள்ளி பேசிய உரையின் மேல் இந்து முன்னணி அளித்த புகாரின் பேரிலும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதல் உருவாக்கி, அதன் மூலம் கலவரத்தை உருவாக்க முற்படுதுல், ஆதாரமற்ற தகவல்களை பரப்பி மத மோதலை உருவாக்குதல், பொது அமைதிக்கு ஊறு விளைவித்தல் என 153, 153ஏ(1)(எ), 505(1)(பி), 505(1)(சி) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது. திருமுருகன் காந்தி, முகிலன், வளர்மதி ஆகியோரின் வரிசையில், தற்போது சுந்தரவள்ளி மீதும் கடுமையான பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இப்பிரிவுகளின் கீழ், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும்.

காவல்துறையின் இந்நடவடிக்கைக்கு எதிர்கட்சிகளிடமும், சமூக வலைதளங்களிலும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் அதிமுக அரசு, கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைகளை பறிக்கும் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மாற்றுக் கருத்துக்களை ஏற்க முடியாத இந்த அரசு திருமுருகன் காந்தி, வளர்மதி, சோபியா, நக்கீரன் கோபால் உள்ளிட்டு பலரை கைது செய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மக்கள் அமைப்புகளின் ஊழியர்கள் மீதும் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது முனைவர் சுந்தரவள்ளி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, முனைவர் சுந்தரவள்ளி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறது.” என்று கூறியுள்ளார்.

சுப.வீரபாண்டியன் செய்துள்ள ட்விட்டர் பதிவில், “தோழர் சுந்தரவள்ளியின் மீது அடக்குமுறைச் சட்டப் பிரிவுகளின் மீது வழக்குகள்! கருத்துரிமைக்கு எதிரான கசையடி. சுந்தரவள்ளி தனி மனிதரில்லை. உரிமைக் குரல்களின் ஓர் அங்கம். அனைவரும் இணைந்து நிற்போம். அநீதியைச் சேர்ந்தெதிர்ப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சுந்தரவள்ளி தனது முகநூல் பக்கத்தில், “தமிழக காவல்துறை என் மீது பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது. மிக்க மகிழ்ச்சி, களத்தில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Warrant against sundaravalli

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X