Washermanpet Anti CAA Protest MK Stalin condemns Police lathicharge against protesters : சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு, சி.ஏ.ஏவுக்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை துவங்கி, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தினார்கள் இஸ்லாமிய அமைப்பினர்.
அவர்கள் அனைவரையும் அமைதியாக கலைந்து போகும் படி காவல்துறையினர் உத்தரவு பிறப்பிக்க, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தது காவல்துறை. காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி 120 பேர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க : சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி
காவல்துறையினரின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஜனநாயகத்தை தானும் காப்பாற்றாமல், ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் ஆவேசமாக அடித்து விரட்டும் அராஜக ஆட்சி இது என்று குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
”ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக திரண்டு நிரம்பி வழிந்த வெகுமக்கள் போராட்டமாக நடந்தது. மிகவும் அமைதியாக நடந்த போராட்டத்தை பார்த்து டெல்லியில் இருப்பவர்கள் சினம் கொள்வார்களே என எண்ணிய அதிமுக அரசு, காவல்துறையை ஏவி அந்த மக்களை கலைக்க முயற்சி செய்துள்ளது. ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறை பாதைக்கு திருப்பி, வன்முறை போராட்டமாக சித்தரிக்க திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை என்று அவர் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது மட்டுமில்லாமல் அதனை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும் மறுத்து வருகிறது தமிழக அரசு என்று தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் முக ஸ்டாலின்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"