சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான எண்ணூர் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 15 ஆம் தேதி அறிவித்தது. மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு விவரங்களை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.
அதன்படி, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்களை வெளியிட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி (எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 21 பேரைக் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி முன் விசாரணை நடந்து வந்தது. “இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பு விவரங்கள் வரும் செப்டம்பர் 19-ம் தேதியன்று அறிவிக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை எனவும், காவல் உதவி ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை உதவி பொறியாளர், பாஜக பிரமுகர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் தண்டனை என போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தனது தீர்ப்பில் தண்டனை விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.