விழுப்புரம் அருகே ஆவணி அவிட்ட நிகழ்ச்சியின்போது விஷக் குளவிகள் கொட்டியதில் சிகிச்சைப் பலனின்றி இசைக்கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தில் நேற்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு குளக்கரை அருகே சமூகத்தினர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக, வாணியம்பாளையம் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபு (55) என்பவர் மேளம் அடிக்க வந்திருந்தார். நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த மரத்தில் இருந்த விஷக் குளவிகள் திடீரென பறந்து வந்து அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கின. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இருப்பினும், குளவிகள் துரத்திச் சென்று பலரைக் கொட்டின. இதில், கோபு உட்பட 20 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி இசைக்கலைஞர் கோபு உயிரிழந்தார். மற்ற 20 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வந்து குளவிக் கூடுகளைத் தீவைத்து அழித்தனர்.
புதுச்சேரி அருகே பாகூர் கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை குளவிகள் கொட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். கோயில் அருகே இருந்த ஒரு மரத்தில் இருந்த குளவிகள் திடீரென பறந்து வந்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் துரத்தித் துரத்திக் கொட்டின. இதனால் சிறுவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, முதலில் பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு 5 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், குளவிக் கூடுகளை முழுமையாக அழித்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி