பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
Coimbatore News in Tamil: கோவை மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நாள்தோறும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. வழக்கமாக இரவு நேரத்தில் மட்டும் யானைகள் ஊருக்குள் வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களிலேயே யானைகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் கொண்ட கூட்டம் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றி வந்தது. பின்னர் மாலை 5 மணி அளவில் கணிதவியல் துறை அருகே முகாமிட்டன இதனை பார்த்த மாணவர்கள் பயத்தில் வகுப்பறைக்குள்ளேயே முடங்கினர்.
பின்னர் இது குறித்து பல்கலைக்கழக காவலாளிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் அங்கு வந்து யானைகள் விரட்டினர். இதனையடுத்து அந்த யானைகள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் புகுந்தது.
மேலும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, சோளம் ஆகியவற்றை சாப்பிட்டது. இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் அதிகாலையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil