தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் இப்போதைக்கு தண்ணீர் பிரச்சனைதான் தலைதுாக்கி உள்ளது. அதனால் வீட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 150 லிட்டர் அளவுக்கு நமது வீடுகளில் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் பெருமளவு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே பொறுப்போடு தண்ணீரை பயன்படுத்தி தண்ணீர் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
அதற்காக சில குறிப்புகள் உங்களுக்காக…
பெரும்பாலான வீடுகளில் பல் துலக்கும்போது குழாயை திறந்து வைத்துக் கொண்டு இருப்பது. எனவே பல் துலக்கி முடிக்கும் வரை தண்ணீரை நிறுத்தி வைத்துவிட்டு துலக்கி முடித்தவுடன் திறந்து கொள்ளலாம். அதே போல் பல வீடுகளில் டாய்லட் ஃபிளஷ்ஷை மிக வேகமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்படி வைத்திருப்பார்கள். இதனால் தண்ணீர் தான் விரயமாகும். ஃபிளஷ்ஷின் வேகத்தை சற்று குறைத்து வைக்கலாம்.
ஷவர் குளியல்
நாம் ஷவரில் குளிக்கும்போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் வரை தண்ணீர் வெளியேறுகிறதாக கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சமயங்களில் ஷவர் குளியலை தவிர்க்கலாம்.
வாஷிங் மெஷின்
வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது நிறையத் தண்ணீர் வீணாகும். அதில் தனித்தனியாக துனியை போடாமல் ஒரே முறை முழு துணியையும் போட்டு துவையுங்கள் கணிசமான அளவு தண்ணீர் சேமிக்கப்படும்.
வாட்டர் மீட்டர்
வாட்டர் மீட்டரை நம்முடைய வீட்டில் பொருத்திவிட்டால் ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு தண்ணீர் செலவிடுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
ஒழுகும் நீர்
தண்ணீர் குழாயை சரியாக மூடாமல் விட்டுவிடுவது தான் அதிகமாக தண்ணீர் வீணாகக் காரணம். அதனால் குழாயை இறுக்கமாக மூடிவிடுங்கள்.
வாஷ் பேஷின்
வாஷ்பேஷின் அடைத்துக் கொண்டால் தண்ணீரை வேகமாக விட்டு சுத்தம் செய்கிறோம். இதில் எவ்வளவு தண்ணீர் வீணாகிறது தெரியுமா? இதற்கென ஸ்பிரேக்கள் உள்ளன. அதை அந்த குழாயோடு இணைத்து விட்டால், குழாய் அடைப்பு ஏற்படும் அது சரி செய்து விடும். இதன் மூலம் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
செடிகளுக்கு
பாத்திரம் கழுவிய, காய்கறி அலசும் தண்ணீரை செடிகளுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் ஓரளவு தண்ணீரை மிச்சப்படுத்தி வீட்டில் தண்ணீர் பஞ்சத்தைப்போக்க முடியும்.