/tamil-ie/media/media_files/uploads/2023/06/mettur.jpg)
மேட்டூர் அணை
தென்மேற்கு பருவமழை ஒரு மாதத்துக்கும் மேலாக தாமதமாகியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் ஆறுகளில் இருந்து நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
அதேபோல், குடகு, மைசூரு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்துள்ளதால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 77.48 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 106 அடியாக இருந்த நிலையில் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் மட்டுமல்லாமல் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ணராஜசாகர் அணையில் 28.59 டிஎம்சி நீர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 9.86 டிஎம்சி மட்டுமே உள்ளது. கபினி அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 8.26 டிஎம்சி நீர் இருப்பு இருந்த நிலையில் இந்த ஆண்டு 4.27 டிஎம்சி மட்டுமே உள்ளது.
துங்கப்பத்ரா அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 44.35 டிஎம்சி நீர் இருப்பு இருந்த நிலையில் இந்த ஆண்டு 4.27 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளிலும் கடந்த ஆண்டை விட சுமார் 70 சதவீதம் குறைவான அளவிலே நீர் இருப்பு உள்ளது.
இதே நிலை அடுத்த இரு வாரங்களுக்கு நீடித்தால் மைசூரு, பெங்களூரு என கர்நாடக மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உருவாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீரின் அளவும் மிக மிக குறைவாக இருக்ககூடும். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, ஜூன் மாத ஒதுக்கீடான 9.1 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தாண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் கடைமடைகளுக்கு தண்ணீர் வரவில்லை என டெல்டா பகுதி விவசாயிகளின் போராட்டம் ஒருபக்கம் துவங்கியிருக்கின்றது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து கொண்டிருப்பதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொய்த்ததாலும் இந்தாண்டு விவசாயத்திற்கும், குடிநீர்க்கும் பஞ்சம் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.