தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சென்னை குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்கு தேவையான குடிநீரை பெறலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுமார் 4-500 தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை.
இதனால், இந்த மூன்று மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சென்னை குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்கு தேவையான குடிநீரை பெறலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து ஒரு வாரத்திற்கு தேவையான குடிநீரை பெறலாம். சென்னை குடிநீர் வாரிய நீர்நிரப்பு நிலையங்களிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குடிநீர் பெறலாம். நுகர்வோர் தங்களது லாரிகள் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.