'குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்று தமிழக அரசு மைக் செட் வைத்து வேண்டுகோள் விடுக்கும் அளவிற்கு தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் வறட்சி தலைவிரித்து ஆடத் துவங்கியுள்ளது. இதை டைமிங்கிற்காகவோ, ரைமிங்கிற்காகவோ சொல்லவில்லை. உண்மை நிலவரம் இது.
2004ம் ஆண்டு... உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை... சென்னையை மெகா வறட்சி ஆட்கொண்டது. சொந்தக்காரர்களை கூட, 'இப்போது வீட்டிற்கு வர வேண்டாம்' என சென்னைவாசிகள் சொன்ன காலம் அது. சுப காரியங்கள் கூட வேண்டாம் என்று தள்ளிப் போடும் அளவிற்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இப்போது மீண்டும் 15 வருடங்கள் கழித்து அப்படியொரு வறட்சியை சந்திக்க சென்னை ஏறக்குறைய தயாராகிவிட்டது. ஏற்கனவே, சென்னையின் பல பகுதிகளில் கார்ப்பரேஷன் குடிநீர் நிறுத்தப்பட்டுவிட்டது. எந்தப் பகுதி மக்களை கேட்டாலும், 'எங்க ஏரியாவுக்கு தண்ணீர் வந்து 10 நாளாகுதுங்க' என்று சொல்லும் அளவுக்கு உள்ளது நிகழ் நிலைமை.
வடகிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால் தான் இந்த வறட்சியை சென்னை எதிர்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. சராசரியை விட 69% அளவு மழை குறைவாக பெய்திருப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் நடப்பாண்டில், சென்னை மாநகரில், குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
சென்னை மாநகரின் தினசரி குடிநீர் தேவை 85 கோடி லிட்டர். ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 55 கோடி லிட்டருக்கும் குறைவாகவே நீர் வினியோகம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உண்மையில், 45 கோடி லிட்டர் அளவிற்கு கீழ் மட்டுமே நீர் வினியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தற்போதே நீர் வினியோக மையத்தில் இருந்து கடைகோடியில் உள்ள பகுதிகளுக்கு குழாய் மூலமான குடிநீர் வினியோகம் இல்லை.
பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய நான்கு ஏரிகள் தான் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. தற்போது, இந்த ஏரிகளின் நீர் இருப்பு, மிக மிக கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி
மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், ஏரியில் இருந்த நீர் இருப்பு 1207 மில்லியன் கன அடி.
தற்போதைய நீர் இருப்பு 2 மில்லியன் கன அடி.
பூண்டி ஏரி
மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், ஏரியில் இருந்த நீர் இருப்பு 362 மில்லியன் கன அடி.
தற்போதைய நீர் இருப்பு 189 மில்லியன் கன அடி.
புழல் ஏரி
மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், ஏரியில் இருந்த நீர் இருப்பு 1769 மில்லியன் கன அடி.
தற்போதைய நீர் இருப்பு 119 மில்லியன் கன அடி.
சோழவரம் ஏரி
மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், ஏரியில் இருந்த நீர் இருப்பு 70 மில்லியன் கன அடி.
தற்போதைய நீர் இருப்பு 10 மில்லியன் கன அடி.
இந்தளவிற்கு அதலபாதாளத்தில் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்திருப்பதால், சென்னையின் குடிநீர் தேவையை எவ்வாறு சமாளிப்பது என சென்னை குடிநீர் வாரியம் விழிபிதுங்கி நிற்கிறது.
பருவ மழை பொய்த்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், விவசாய கிணறுகளில் இருந்து, லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் நீர் எடுக்கும் திட்டமும் கைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, உள்ளூர் நீர் ஆதாரங்கள், கல்குவாரி குட்டைகள், சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகள் ஆகியவற்றில் இருந்து, நீர் எடுப்பதற்கான முயற்சியில் சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது.
இவை தவிர வீராணம் ஏரி நீர், கடல் சுத்திகரிப்பு நிலையம், கிருஷ்ணா நதி நீர் என இதை அங்கே போட்டு, அதை இங்கே போட்டு என்று மிடில் கிளாஸ் குடும்பத் தலைவன் மாதக் கடைசியில் குடும்ப செலவுகளை சமாளிப்பது போல தமிழக அரசு சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.