வெளிநாடு சென்றுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை சென்னை திரும்பி வந்தவுடன் 22ம் தேதி தண்ணீர் பிரச்சனைக்காக போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே திமுக அறிவித்திருந்தது. எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பிரச்சனை இருக்கின்றதோ, அங்கெல்லாம் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்திற்கு தயாராகி வருகின்றது திமுக.
தண்ணீர் பிரச்சனைக்கு முறையாக தீர்வு காணாத மாநில அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் மக்களை ஒன்று திரட்டி அறவழியில் போராட்டத்தினை நடத்த வேண்டும் என திமுக அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க : 21, 22 தேதிகளில் தமிழகத்தை தேடி வரும் கனமழை!
போதுமான தண்ணீர் இல்லாத காரணங்களால், ஐ.டி. நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், மற்றும் மெட்ரோ கழிவறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் சமீபமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தன்னுடைய கடமையை சரியாக நிறைவேற்றாததன் விளைவே இந்த தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என்றும், அதனால் அவரை உடனே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.
ஆனால் தமிழக அரசோ, முந்தைய காலகட்டங்களை விட தற்போது அதிக அளவு தண்ணீர் மக்களுக்கு விநியோகம் செய்வதாகவும், நவம்பர் மாத இறுதி வரை இந்த நிலையை கட்டுக்குள் கொண்டு வர போதுமான அளவு நீர் கையிருப்பில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : தண்ணீர்… தண்ணீர்: அரசு அலட்சியத்தால் பெருகும் கண்ணீர்