தலைநகர் சென்னையில் மீண்டும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட துவங்கியுள்ளது. இதற்கு பலர் அரசை குறைகூறினாலும், மக்களின் தவறும் இதில் உள்ளது மறுக்க இயலாதது.
நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை சரிவர மேற்கொள்ளாதது, தண்ணீர் வழங்கும் முறையை ஒழுங்குபடுத்தாதது, அதிகளவிலான கட்டட பணிகள் உள்ளிட்ட பணிகளின் காரணமாக தண்ணீரின் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது.
2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போதுதான் நீர்நிலைகளிலும், நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் பாதைகளிலும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு அவைகள் அகற்றப்பட்டன. அந்த ஆக்கிரமிப்புகள் தற்போதும் அதே இடத்தில் முளைத்துவிட்டது தான் கண்டிக்கத்தக்க விசயம்.
கடந்த 2017ல் தான் சென்னையில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போதும், தண்ணீர் பஞ்சம், சென்னையில் பூதாகரமான நிலையை அடைந்துள்ளது. தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சி, மக்களுக்கு பைப் மூலம் வழங்கும் தண்ணீரின் அளவை 40 சதவீதம் குறைத்துள்ளது.
பருவமழை கடந்தாண்டு பொய்த்ததன் காரணமாக, நீர்நிலைகளில் போதியளவு தண்ணீர் இல்லாமல் வறண்டு பாலைவனமாக காணப்படுகிறது. இந்தாண்டு பருவமழை சராசரியாகவே இருக்கும் என்று கூறப்பட்டிருந்தாலும், சென்னையில் 2018 டிசம்பர் மாதத்திற்கு பிறகு மழையே பெய்யவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை நகருக்கு தினமும் 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சென்னை மாநகராட்சியால் தற்போது வழங்கப்பட்டு வருவதோ 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே. தற்போது வழங்கப்பட்டு வரும் இந்த தண்ணீரிலும் உணவு சமைக்க இயலாத நிலையே உள்ளது. தண்ணீர் ஒருவித துர்நாற்றத்துடன் வருகிறது. சில சமயம் கழிவுநீர் கலந்தும் வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நகரப்பகுதிகளில் தான் இந்தநிலை. சென்னை புறநகர்ப்பகுதிகளில் நிலைமை வேறுவிதமாக இருக்கும் என்று நீங்கள் எண்ணினால், அது உங்கள் தவறு. சென்னை சிட்டி பகுதியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கும் இதேநிலை தான் நீடிக்கிறது. அந்த பகுதிகளில் குழாய் தண்ணீர் வசதி இல்லாததால், அவர்கள் வாட்டர் கேன்களையே நம்பி உள்ளனர். வாட்டர் கேன்களுக்காக மட்டும் மாதம் ஒன்றிற்கு ரு. 1,500 செலவழிப்பதாக புறநகர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் வரியை, பல ஆண்டுகளாக தவறாது செலுத்தி வரும்போதும் தங்கள் பகுதிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை தண்ணீர் வசதி செய்துதரப்படவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சென்னை மாநகராட்சியால் மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிலையில், தனியார் தண்ணீர் லாரிகள் மட்டும் எவ்வாறு கேட்டநேரத்தில் கேட்ட அளவிற்கு தண்ணீர் விற்பனை செய்யமுடிகிறது அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனியார் தண்ணீர் லாரி நிறுவனங்கள். விவசாய நிலங்களில் போர்வெல் அமைத்து நிலத்தடி நீர் எடுத்து வருகின்றனர். இவர்கள் அளவுக்கு அதிகமாக போர் போடுவதால், மற்ற பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
பால் வாங்க செலவழிப்பதை விட தண்ணீர் வாங்கவே அதிக பணத்தை செலவழிக்கிறோம். ஒருமுறை அணிந்த உடையையே மறுநாளும் அணிய வேண்டிய நிலையில் உள்ளோம். எங்களால் சரியாக குளிக்க கூட முடிவதில்லை, அந்தளவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன், சிஎம்டிஏவிடம் ரூ.50 ஆயிரம் தந்து எங்கள் பகுதியில் தண்ணீர் வசதி செய்துதர விண்ணப்பித்தோம். இதுவரை ஒரு பணியும் நடைபெறவில்லை என்று அபார்ட்மெண்ட்வாசி ஒருவர் கூறினார்.
தீர்வு தான் என்ன
மக்கள் இருக்கும் தண்ணீரையாவது சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
வீட்டில் சரியாக மூடப்படாத குழாயில் இருந்து ஒரு நாளைக்கு 14 சதவீத தண்ணீர் வீண் ஆவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரை உபேயாகித்த பின், தண்ணீர் குழாய் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்க்கவும்.
நீர்நிலைகளில் தற்போது நீர்மட்டம் வறண்டு காணப்படுகிறது. பருவமழை விரைவில் துவங்க உள்ளதால், அதற்குள் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நீர்நிலைகளை தூர்வாரும் நடவடிக்கைகளை துவங்க வேண்டும்.
கடல்நீரை குடிநீராக்கும் திறன் பெற்ற தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
புழல், சோழவரம், மற்றும் மதுராந்தகம் ஏரிகள்தான் சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் இடங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றன.
அரசு மீது புகார்
சென்னைக்கு அருகே மேலும் ஒரு நீர்நிலையை உருவாக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பிலேயே இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது, அனைத்து நீர்நிலைகளிலும் நிரம்பி வழிந்தன. பல லட்சம் லிட்டர் தண்ணீர் கடலில் கலந்தன. அந்த தண்ணீரை திறம்பட தேக்கி வைக்க அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடல் நீரை குடிநீராக்கும் புதிய ஆலையையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
முதல்வர் தலைமையில் கூட்டம்
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பலபகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.