Advertisment

'தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

Krishna water reduced - TN live updates

தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் போது, சென்னை நகரில் குடிநீர் பிரச்னையை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் அதன் தலைமைப் பொறியாளர் ஆறுமுகம் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 2017 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்து, சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால், நகருக்கு வழங்கும் தண்ணீரின் அளவை, ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் என்பது, ஜூன் 1ஆம் தேதி முதல் 525 மில்லியன் லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் மூலம், தற்போது சென்னைக்கு ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் வழங்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,231 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது, 26 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது நீர் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

1,465 மில்லியன் கன அடிநீர் கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 569 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அங்கிருந்து, ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் நீர் சென்னைக்கு வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

900 தண்ணீர் லாரிகள், ஒரு நாளைக்கு 9,400 நடைகள் தற்போது தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாகவும், குறுகிய சாலைகளில் செல்ல ஏதுவாக, 2,000 முதல் 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய லாரிகள் மூலமும் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் லிட்டர் முதல் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, புதிய ஆழ்துழை கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள், 212 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?

ஏரி, குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கை என்ன?

மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செங்குன்றம், சோழவரம் ஏரிகள் வறண்டு வந்த நிலையில் மாற்று ஏற்பாடுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

கடந்த ஆண்டு நீர் வற்றி வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கடைசி நேரத்தில் மழை நீர் சேமிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் என்ன பலன் என தமிழக நீர் மேலாண்மை துறைக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். தண்ணீர் தேவை என்பது உடனடியாக ஒரே நாளில் ஏற்படவில்லை எனவும் தேவை ஏற்படும் என முன்னரே தெரியும் எனவும் அவ்வாறு இருந்தும் நீர் மேலாண்மை நடவடிக்கையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அது பூஜ்ஜியம் "0" அளவில் தான் உள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 270 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யும் வகையில் 270 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தது.

மேலும், சோழவரம் ஏரி 38 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டுள்ளது என்றும் கடல் நீரை குடிநீராக்கும் மூன்றாவது யூனிட் செயல்படத் துவங்கி விட்டால் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு பருவமழையை எதிர்பார்க்க தேவையில்லை எனவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, உத்தரவிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment