தண்ணீர் பிரச்னை பூதாகரமாக உள்ள நிலையில் நாளை பள்ளிகள் திறப்பு : என்ன நடக்குமோ!!!

வீடுகளில் குளிக்க, குடிக்கவே தண்ணீர் தேவைக்கேற்ப இல்லாத நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியின் நிலையை சொல்லவா வேண்டும்...

By: Updated: June 2, 2019, 12:28:57 PM

தண்ணீர் பிரச்னை, பூதாகரமாக மாறியுள்ள நிலையில், நாளை (3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வீடுகளில் குளிக்க, குடிக்கவே தண்ணீர் தேவைக்கேற்ப இல்லாத நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியின் நிலையை சொல்லவா வேண்டும்…

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பலபகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. முதல்வர் அமைச்சரவையை கூட்டி, மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விவாதித்தார். தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.230கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் செயல்படுத்தபட இருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளின் நிலை

கோடை விடுமுறைக்கு பின், நாளை (ஜூன் 3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து மட்டுமே, கிட்டத்தட்ட 1 மில்லியன் மாணவர்கள் நாளை முதல் பள்ளி செல்ல உள்ளனர். பல பள்ளிகள் போர்வெல் மற்றும் மெட்ரோ வாட்டர் மூலம், தங்களது தண்ணீர் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்து வந்தன. பள்ளி இயங்காமல் இருக்கும்போதே, தண்ணீர் பிரச்னையை சமாளிக்க இயலாத நிலையில், பள்ளி திறந்து முழுவீச்சுடன் செயல்பட ஆரம்பித்தால், சொல்லவே வேணாம்…..

2 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், குடிப்பதற்காக 2 ஆயிரம் லிட்டரும், சுகாதார தேவைகளுக்காக தினமும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். இதனால், தனியார் பள்ளிகள் மெட்ரோ வாட்டரின் சேவையை நம்பியிருக்காமல், தனியார் தண்ணீர் லாரிகளை நாட துவங்கியுள்ளன.
சென்னை தி.நகர் வித்யோதயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியை சாந்தி கூ றியதாவது, எங்கள் பள்ளியில் 2 போர்வெல்கள் உள்ளன. ஆனால், இந்த தண்ணீர் போதுமா என்று தெரியவில்லை. மாணவர்களை விட மாணவிகள் என்றால், அவர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவது இயல்புதான். அதற்காக, பள்ளி திறப்பை ஒரு வாரத்திற்கு தள்ளிவைப்பது சரியான தீர்வு ஆகாது என்று கூறினார்.

நுங்கம்பாக்கம் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இறைவன் கூறியதாவது, பெரும்பாலான அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் நிலத்தடி நீர் மற்றும் மெட்ரோ வாட்டரை நம்பியே உள்ளன. பள்ளி இயங்க துவங்கியவுடனே, மெட்ரோ வாட்டரை ஒருநாள்விட்டு ஒருநாள் விட நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். நுங்கம்பாக்கம் பகுதியில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே,மெட்ரோ வாட்டர் வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளி கல்வித்துறையின் அறிவுறுத்தல்படி, சிபிஎஸ்இ பள்ளிகளும் நாளை திறக்கப்பட உள்ளன. அசன் நினைவு சீனியர் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுனிதா விபின்சந்திரன் கூறியதாவது, எங்கள் பள்ளியில் 2,400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் போர்வெல் வசதி இருந்தபோதும், கூடுதலாக மெட்ரோ வாட்டரையும் வாங்க உள்ளோம். அரசு, பள்ளி திறப்பை ஒருவாரகாலம் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று சுனிதா கூறினார்.

தாம்பரம் பகுதியில் இயங்கி வரும் பள்ளிகள், பள்ளியின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதற்காக, விவசாயிகளின் அனுமதியுடன் அவர்களின் விளைநிலங்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்த பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
தாம்பரம் பகுதியில் இயங்கும் பள்ளியின் முதல்வர் கூறியதாவது, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளி திறக்கப்படும். ஐந்து வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு இரண்டாவது வாரத்தில் பள்ளி திறக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது, தண்ணீர் தட்டுப்பாடு விவகாரம் குறித்து அரசு. அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமிருந்து முதலில் அறிக்கை பெற வேண்டும். கலெக்டர்கள், பள்ளிகளில் தண்ணீர் போதிய அளவில் உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தண்ணீர் இல்லாத பட்சத்தில் பெரிய அளவிலான சுகாதார கேடுகளை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிடகூடாது என்று அவர் கூறினார்.

பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன் கூறியதாவது, எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டே, பள்ளி திறப்பு ஜூன் 3ம் தேதி என்பதை இறுதி செய்துள்ளோம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால், பள்ளி திறப்பை ஜூன் 3 என தீர்மானித்தோம். அந்த தேதிக்கு பள்ளி திறக்கப்படாவிட்டால், மாணவர்களின் கல்விபாதிக்கப்படும் என்று ராமேஸ்வரமுருகன் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Water scarcity worries in chennai schools reopens tomorrow

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X