புதுச்சேரியில் விடிய விடிய கொட்டிய மழையால் புதுவை தற்காலிக பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
பஸ்ஸிலிருந்து இறங்கியதும் பயணிகள் பெரும் அவதிப்பட்டு தட்டு தடுமாறி தற்காலிக பஸ் நிலையத்தை விட்டு வெளியே வருவதாக கூறுகின்றனர்.
புதுச்சேரியில் அவசர நிலையை எதிர்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிவாரண முகங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கவும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை மற்றும் பாதிப்புகளை எதிர் கொள்ள மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் வருவாய், தீயணைப்பு, பொதுப்பணி, உள்ளாட்சி, குடிமை பொருள் வழங்கல் துறை, மின்சாரம், சுகாதாரம், காவல்துறை, கடலோர காவல் படை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்ற நிலையில் பல்வேறு முக்கிய உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்தார்.
அதன்படி கனமழை மற்றும் புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும், மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கக்கூடிய நிவாரண மையங்களான பள்ளி கட்டிடங்களை தயார் நிலையில் வைப்பதுடன், அங்கு தங்குவோருக்கு தேவையான உணவுப் பொருட்களை தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மழைக்காலத்திற்கு தேவையான மருந்துகளை இருப்பு வைத்து கொள்ள வேண்டும், மீன்வளத் துறையினர் மழை வெள்ளக் காலங்களில் படகுகள் இயக்குபவர்கள் அவசரத்திற்கு பயன்படுத்த ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், கடலுக்கு செல்ல யாரையும் அனுமதிக்க கூடாது, அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.
மேலும் அவசர நிலையை எதிர்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.