நீர் நிலைகளை ஆக்கிரமித்து, கட்டிடங்கள் கட்டியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மின்சாரம் வழங்கக்கூடாது என மதுரை உயர்நீதி மன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். குறிப்பாக மழைக்காலத்தில், வடிநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி, டெங்கு, காலரா போன்ற நோய்களை தோற்றுவிப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.
இந்நிலையில் இது குறித்த விசாரணை மதுரை உயர்நீதி மன்ற கிளையில் நடைபெற்றது. நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய பெஞ்ச், கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், “நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருப்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தவிர இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும், மாவட்ட ஆட்சியர் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் வரைபடத்தை, தேர்தல் ஆணையம், மின்சார வாரியம், மற்றும் பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு பிப்ரவரி 8-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.