மக்களவை தேர்தலில், பாஜக வெற்றி பெற்ற மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
அதேபோல், காங்கிரஸ் இல்லா இந்தியா அமைப்போம் என்று பாரதிய ஜனதா கூறி, அதனை நிறைவேற்றியும் வரும் நிலையில், மோடியின் நண்பராக அறியப்படும் நடிகர் ரஜினி, காங்கிரஸ் கட்சியும் வலுப்பெற வேண்டும் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்த், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வி தொடர்பான கேள்விக்கு ரஜினி கூறிய பதில் : ராகுல் காந்திக்கு தலைமை பண்பு இல்லை என்று கூற மாட்டேன். காங்கிரஸ் கட்சி என்பது மிகவும் பழமையான கட்சி. மிகவும் மூத்த தலைவர்கள் அங்கே உள்ளனர். ஒரு இளைஞராக ராகுல் காந்திக்கு மூத்த தலைவர்களை கையாளுவது என்பது சிரமமாக தான் இருக்கும். எனது கணிப்பின்படி காங்கிரசின் மூத்த தலைவர்கள் இந்த தேர்தலில் கடினமாக பணியாற்றவில்லை. தலைமைக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய கூடாது. அவர் இன்னும் உறுதியாக இருக்கவேண்டும். தன்னால் முடியும் என்பதை அவர் நிரூபித்துக்காட்ட வேண்டும். ஜனநாயகத்தில் ஆளும் கட்சியை போலவே எதிர்க்கட்சியும் முக்கியத்துவமானது. எதிர்க்கட்சிகளும் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். தற்போது ஆளும் கட்சி, மிகவும் வலிமையாக உள்ளது. அதேபோன்று எதிர்க்கட்சியும் வலிமையாக மாறும் என்று நான் எதிர்பார்ப்பதாக ரஜினி கூறினார்.