திருச்சியில் புத்தக திருவிழா செப்டம்பர் 16 நேற்று முதல் 25 ஆம் தேதி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
Advertisment
முதல் நாள் துவக்க விழாவான வெள்ளிக்கிழமை இரவு நிகழ்வில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், கன்னிமாரா நூலகத்தில் அண்ணா இருந்ததால் தான் அவரை சொற்பொழிவில் யாராலும் வெல்ல முடியாது. “தலைப்பு இல்லை”என்ற தலைப்பில் 3 மணி நேரம் பேசினார். பாராளுமன்றத்தில் அவருக்கு கொடுத்தது 5 நிமிடம் தான்.ஆனால் பிரதமர் நேரு மேலும் பேச வாய்ப்பு கொடுங்கள் என்றார்.
மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். நான் நிறைய மீட்டிங் செல்வேன் அங்கு ஆங்கிலத்தில் பேசுவார்கள் கடினமாக இருக்கும். எனவே நன்றாக படிக்க வேண்டும். நான் தெற்கில் இருந்து வந்திருக்கிறேன். எங்கள் நாடு இப்படியிருக்கிறது என தனது முதல் உரையிலேயே பேசியவர் பேரறிஞர் அண்ணா. மத்திய பல்கலைக்கழகம் எங்களுக்கு ஒன்று (திருச்சிக்கு) வேண்டும் என்று கலைஞரிடம் கேட்டேன். திருச்சிக்கு ஒன்று கொடுத்தார், திருவாரூக்கு ஒன்று கொடுத்தார், கோவைக்கு ஒன்று கொடுத்தார். ஆனால் அது நம்ம ஆளுங்களுக்கு 10 பைசாவிற்க்கு பிரோயஜனம் இல்லை. அங்க நம்மூர்காரன் படிக்க முடியல, நம்மூர்காரன் வேலை செய்ய முடியல. எனவே, மத்திய பல்கலைக்கழகமெல்லாம் நமக்கு தேவையில்லை. இங்கு இருக்கிற (திருச்சி) பல்கலைக்கழகங்களிலே கற்றுத் தெரிந்தாலே சிறப்பாக படிக்கலாம்.
ஆன்மீகம், சரித்திரம் போன்றவற்றை உள்ளடக்கி திருச்சியை பற்றி நந்தலாலா சிறப்பாக எழுதியுள்ளார். திருச்சி மாநகராட்சி, சென்னை மாநகராட்சி போல விரிவு படுத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை என்பதை மாற்றி சென்னை, கோவை, திருச்சி என்று வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்ட மன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் , ஸ்டாலின் குமார், அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”