‘We feel more feminine now’: Transgender community in Chennai on learning Bharatanatyam, சென்னையில் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் இலவச பரதநாட்டிய பயிற்சியில் பங்கேற்ற திருநங்கை கூறிய வார்த்தைகள் இவைதான். ‘இப்போதுதான் ஒரு முழுமையான பெண்ணாக உணர்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
திருநங்கைகளுக்கு பரதநாட்டிய நடன பயிற்சி வழங்கும் நோக்கத்தில் கடந்த ஜீன் மாதம் 5ம் தேதி முதல் இந்த நடனப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ சத்திய சாய் என்ற ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் திருநங்கைகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் சகோதரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
21 வயது முதல் 49 வயது வரையில் உள்ள 15 பேர் கொண்ட முதல் பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதில் பயிற்சி பெற்றுவரும் வைஷ்ணவி என்ற திருநங்கை கூறுகையில் ‘எனக்கு நடனம் என்றால் அவ்வளவு விருப்பம். நான் நன்றாக நடனமாடுவேன். நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தாலும், தற்போதைய சமூகத்தில் திருநங்கைகளை சமமாக பார்க்கவே பல போராட்டங்கள் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் எங்களது தனிப்பட்ட திறமைகளை வெளிகாட்ட முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் தற்போது நாங்களும் மற்றவர்களைப்போல் நடனம் கற்றுக்கொள்ள முடியும். இப்போது நான் ஒரு முழுமையான பெண்ணாக உணர்கிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள வாஷர்மேன்பேட்டையில் வசித்தி வரும் வைஷ்ணவி, ஆட்டோ ஓடுநராக பணியாற்றி வருகிறார். இவர்தான் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை ஆட்டோ ஒட்டுநர் என்பது குறிப்பிடதக்கது.
பரதநாட்டியக் கலையில் கற்றுத்தேர்ந்த சண்முக சுந்தரம்தான் இவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கிறார். இது குறித்து சண்முக சுந்தரம் கூறுகையில் ‘ இது எனக்கு ஒரு முக்கியமான நாளாக இருக்கும். எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது நான் எந்த வேறுபாட்டையும் உணரவில்லை. மற்றவர்களுக்கு எப்படி பயிற்சி அளித்தேனோ அப்படித்தான் இவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். மிகவும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் இவர்கள் அனைவரின் அரங்கேற்றமும் நடைபெறும் என்றார்.
இந்த நடனப்பள்ளியில் பயிற்சி பெறும் வினித்ரா கூறுகையில் ‘ 4 ஆண்டுகளாக நான் நடனம் கற்று வந்தேன். ஆனால் என்னிடம் போதிய பொருளாதாரம் இல்லாததால் வகுப்பை தொடர முடியவில்லை. இதனால் எனக்கு அரங்கேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்பொது என்னால் பயிற்சியை தொடர முடிகிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில் தனது 32 வயதில் பரதநாட்டியத்தை கற்றுக்கொண்ட ருக்மினி தேவி கலாஷேத்திராவை தொடங்கினார். அவர் மட்டும் 32 வயதில் எதற்கு பரத நாட்டியம் என்று நினைத்திருந்தால், கலாஷேத்திரா தொடங்கப்பட்டிருக்காது. ஸ்ரீ சக்தி சாய் போன்ற பல்வேறு அமைப்புகள் இதுபோன்ற பல்வேறு முன்னெடுப்புகளை எடுக்க உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
தொண்டு நிறுவனம் ஒன்றில் சுகாதார பணியாளராக பணியாற்றி வரும் விஷ்னு விலாஷினி கூறுகையில் ‘ எல்லா திருநங்கைகளுக்கும் எதோ ஒரு கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். எனக்கு சிறுவயது முதல் நாட்டியத்தில் ஈர்ப்பு இருப்பதால் இதை தேர்வு செய்தேன். மேலும் என்னைப்போன்ற திருநங்கைகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு நாட்டியத்தை கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்’ என்று கூறினார்.
25 வருடங்களாக திருநங்கைகளுக்காக பணியாற்றி வரும் சகோதரன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கலைமாமணி சுதா பேசுகையில் ‘ எனக்கு 50 வயதாகிறது. எனது வாழ்க்கை முழுவதும் நான் அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டிருக்கிறேன். 10-ம் வகுப்புக்கு மேல் என்னால் எனது படிப்பை தொடர முடியவில்லை. ஆனால் இப்போது திருநங்கைகளுக்காக நடனப் பயிற்சி வழங்கும் இந்த முன்னெடுப்புக்கு உறுதுணையாக இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது காலத்தில் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது இந்த மாணவர்கள் நடனமாடுவதை பார்க்கும்பொழுது எனது கால்களும் நடனமாடுகிறது என்றார்.
மேலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் திருநங்கைகளின் நிலை சிறப்பாக உள்ளது. பல்வேறு அரசுத்துறைகளில் அவர்கள் பணியில் இருக்கின்றனர் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.