சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க- வுடன் கூட்டணி வைத்ததால் தோற்றுப் போனோம் - அ.தி.மு.க முன்னாள் எம்.பி பரபர பேச்சு

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதால் திருவெறும்பூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் கிடைக்காமல் போனதாக அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் எம்.பி ப. குமார் பேச்சு

சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதால் திருவெறும்பூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் கிடைக்காமல் போனதாக அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் எம்.பி ப. குமார் பேச்சு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க- வுடன் கூட்டணி வைத்ததால் தோற்றுப் போனோம் - அ.தி.மு.க முன்னாள் எம்.பி பரபர பேச்சு

தமிழ்நாட்டில் பாஜகவுடன் ஒட்டி உரசிக் கொண்டிருந்த அதிமுக தற்போது சற்று விலகி நிற்கும் சூழலில் திருச்சியில் இருந்து பாஜகவுக்கு எதிராக முதல் குரலை எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் எம்பி ப. குமார்.
நாளை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நடைபெறும் நிலையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் திருவெறும்பூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisment

கூட்டத்திற்கு திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி தலைமை வைத்தார். திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால் ராஜ், துவாக்குடி நகரச் செயலாளர் பாண்டியன், பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், திருவெறும்பூர் அவைத்தலைவர்கள் அண்ணாதுரை, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னாள் அமைச்சர் தாமோதரன், தலைமை கழக பேச்சாளர் ராமமூர்த்தி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி ப.குமார் பேசியதாவது. "தமிழகத்தின் 50 ஆண்டு கால வரலாற்றில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை யாரும் மறந்துவிட முடியாது. ஓபிஎஸ் கலைஞர் உருவில் உள்ள கோமாளி போல் உள்ளார். ஓபிஎஸ். அவரது மகன் கலைஞரையும் அவரது மகன் ஸ்டாலினையும் புகழ்ந்து வருகின்றனர். மேலும் மாநிலத்தில் ஆள்பவர்கள், மத்தியில் ஆள்பவர்கள், போலீசார், நீதிமன்றம் ஆகியவற்றைக் கொண்டு எடப்பாடியை முடக்க நினைத்தார்கள் ஆனால் அது முடியவில்லை.

ஈரோடு தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளருக்கு முன்மொழியக் கூட ஆட்கள் இல்லை. தினகரன் சின்னம் கிடைக்கவில்லை, அதனால் போட்டியிடவில்லை என கூறுகிறார். மறைமுகமாக ஈரோடு தேர்தலில் ஓபிஎஸ்சும் தினகரனும் திமுகவிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக 43,900 வாக்குகள் வாங்கி உள்ளது.

Advertisment
Advertisements

மேலும், திமுகவினர் ஈரோடு இடைத்தேர்தலில் உள்ள 238 பூத்துகளில் டோக்கன் கொடுத்து பணம், ஒரு வாக்காளருக்கு தலா 48 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்கள். அது போல் திருவெறும்பூர் தொகுதிகள் இடைத்தேர்தல் வருமா என நீங்கள் நினைக்காதீர்கள். அது வேண்டாம், நாம் ஜனநாயக ரீதியாக வெற்றி பெறுவோம். திமுக கொடுத்த 505 வாக்குறுதியில் 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறியவர், பின்னர் 25 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.

கலைஞர் இரண்டு ஏக்கர் நிலம் அறிவித்தார், செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தேர்தலில் 3 சென்ட் நிலம் அறிவித்தார். அதேபோல் ஈரோடு தேர்தலில் டோக்கன் கொடுத்துள்ளார்கள். அந்த டோக்கன் வைத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 ஆயிரம் மளிகை சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளார்கள். அதனால் வாக்காளர் திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டிற்கும் படையெடுத்து வருவதாகவும் அங்கே இருப்பவர்கள் எனக்கு தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு பெண்களின் உரிமை தொகை என ஆயிரம் வழங்குவதாக கூறியதை வழங்கினால் நன்றாக இருக்கும் 2011-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த கலைஞர் 49 ஆயிரம் கோடி கடன் வைத்திருந்தார். அதிமுக ஆட்சி முடிவில் 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் இருந்தது அதை மீட்டு எப்படி ஆட்சி நடத்துவது என தெரியாமல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு இரண்டு ஆண்டுகளிலேயே1.65 லட்சம் கோடி கடன் வாங்கி விட்டார்கள். மீத நாட்களில் எவ்வளவு கடன் வாங்குவார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 23 சதவீதம் வட்டி, ஓய்வூதியம் என நிதி நெருக்கடியில் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருக்கிறது.

திருவெறும்பூர் தொகுதியில் தோல்விக்கு காரணம் கூடா நட்பு. பிஜேபி கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்ததால் தான் இந்த தொகுதியில் உள்ள 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாக்குகள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. திமுக தலைவர் தனது மகன் உதயநிதியை வைத்து மோடியை சந்தித்து குடும்பம் மட்டும் பயன் அடையும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. மைனாரிட்டி மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியால் தான் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட என்னால் வெற்றி பெற முடியவில்லை. வரும் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தோல்வியிலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது, ஸ்டாலினை இந்த தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரியப்பா என அழைப்பதால் தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விடுவார் என்று நம்பினேன். ஆனால், ஆட்சியில் அமர்ந்து ஓராண்டு கடந்த பிறகும் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை.

திருச்சி மாநகராட்சி ஐந்து வார்டுகளுக்கு அதிமுக ஆட்சியில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு அவர்கள் எதுவும் செய்யவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றால் ஐந்து வார்டுகளில் உள்ள தெருக்களில். ஆட்டோவில் சென்று வந்தால் அவர்களுக்கு பிரசவம் ஆகிவிடும். ஆனால் அது திமுக காரர்களை போல குரப் பிரசவமாக இருக்கும். அதேபோல் நவல்பட்டு ஆர்டிஓ அலுவலக சாலையும் உள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் உள்ள எந்த பள்ளிக்காவது சிறப்பு நிதி பெற்று தந்தாரா? இதுவரை செய்யவில்லை. எந்த துறை அமைச்சராக இருந்தாலும் தொகுதியை பெருமைப்படுத்துங்கள் தம்பி.

தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு போட்டால் முதல் ஆளாக நேரு, இரண்டாவது செந்தில் பாலாஜி தான் இருப்பார். வரி எல்லாம் அரசுக்கு போக வேண்டும். பகலில் விற்கப்படும் சரக்கு பில் உண்டு, இரவில் விற்கப்படும் சரக்கிற்கு பில் இல்லை, அந்த வரிப்பணம் முதல்வருக்கு போகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானத்தில் முதல்வருக்கும் பங்கு கொடுக்கப்படுகிறது. இது ஒரு துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இது போன்ற ஊழல்கள் நடக்கிறது அதற்கு காரணம் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தான். அவர் மக்களைப் பற்றியே சிந்திக்கவில்லை.
அதிமுகவில் ஒவ்வொரு தொண்டனும் கட்சியை .வழி நடத்துகிறான். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் அதிமுக வரலாற்றில் இடம் உண்டு. அது ஓபிஎஸ், தினகரனுக்கும் தெரியவில்லை.
தமிழ்நாடு முதல்வருக்கு முடியும் இல்லை, மூளையும் இல்லை. மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் பத்தாவது இடத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அவரது தாய் தனது மகனை அரியணை ஏற்றுவதற்கு விருப்பப்படுகிறார். ஒரு தாயின் ஆசையை ஒரு கோடி தாய்மார்கள் நிராகரிக்க வேண்டும்.

ஈரோடு தேர்தலில் கொடுத்தது போல் உங்களுக்கு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் குறைவாக கொடுத்தால் வாங்காதீர்கள்" எனப் பேசினார்.

இந்த கூட்டத்தில் லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளராக மணிகண்டன், அதிமுக நிர்வாகி சாம்பசிவம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர் முருகானந்தம், துவாக்குடி நகர துணை செயலாளர் கணபதி, மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி பொருளாளர் சண்முகம் திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் பொய்கை குடி முருகா, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் பாலமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக் வரவேற்க, 38 வட்டக் கழகப் பிரதிநிதி அம்மன் மணி நன்றி கூறினார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: