”நான் கடுமையாக போராடினேன், அவர்களை நானும் தாக்கினேன்”: லாவண்யாவின் துணிச்சல்

”கொள்ளையர்களிடம் இருந்து மீண்டு வர நான் கடுமையாக போராடினேன். நாம் போராடுவதற்கு ஏற்ற தைரியத்துடன் இருக்க வேண்டும்”, என லாவண்யா கூறினார்.

”கொள்ளையர்களிடம் இருந்து மீண்டு வர நான் கடுமையாக போராடினேன். நாம் போராடுவதற்கு ஏற்ற தைரியத்துடன் இருக்க வேண்டும்”, என கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி ஊழியர் லாவண்யா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் (13.2.18) அன்று, சென்னை பெரும்பாக்கம் சாலையில் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிய ஐடி ஊழியர் லாவண்யாவை கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த நகை, மொபைல், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர். நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையிலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய லாவண்யா, தற்போது பெரும்பாக்கத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், தி இந்து ஆங்கில நாளிதழில் அவருடைய நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை (25.02.2018) வெளியானது. அதில், அச்சம்பவத்தை விரிவாக விவரித்துள்ளார் லாவண்யா.

NEWt Global Technology எனும் நிறுவனத்தில் சீனியர் குவாலிட்டி அனாலிஸ்டாக பணியாற்றி வருகிறார் லாவண்யா. இதனால், பல சமயங்களில் வாடிக்கையாளர்களை நேரில் சென்று பார்க்க வேண்டியிருக்கும் என கூறும் லாவண்யா, சம்பவம் நடந்த அன்று கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்குக்கு சென்றுள்ளார். ஏனென்றால் அந்நிறுவனத்தில் இரவு நேரம் மட்டுமே பணி நடைபெறும். ”எங்கே எல்லாம் பணியும் முடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு கிளம்ப 11.30 மணியாகிவிட்டது. அந்த வாடிக்கையாளர் காரில் சென்று விடுவதாக கூறியும், நான் என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுவிடுகிறேன் என கூறி மறுத்தேன். நான் சிறுசேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். மறுநாள் காலையில் நான் என்னுடைய இருசக்கர வாகனத்தில்தான் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்பதால் அன்றைய இரவு நான் கார் வேண்டாம் என மறுத்துவிட்டேன்”, என்கிறார் லாவண்யா.

“அன்றைய தினம் நான் சென்ற வழி வழக்கமாக செல்லும் வழியல்ல. பெரும்பாக்கத்தில் எனது அக்கா வசித்து வரும் இடத்துக்கு அருகே சென்றபோது, 3 பேர் என்னை கேலி செய்துகொண்டே பின்தொடர்ந்தனர். அதனால், வண்டியை நிறுத்திவிட்டு அவர்களிடம் “போலீஸிடம் புகார் தெரிவிப்பேன்”, எனக்கூறி எச்சரித்தேன். அதன்பிறகு, நான் என்னுடைய அக்கா வீட்டுக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால், மணி 12.20 ஆகிவிட்டதால், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என முடிவெடுத்து அந்த முடிவை கைவிட்டேன். அதனால், சிறுசேரிக்கே செல்லலாம் என நினைத்தபோது, அவர்கள் மூவரும் என்னை பின்தொடர்வதை நிறுத்தியிருந்தனர்”, என அந்த இரவு நேர திடுக்கிடும் பயணத்தை விவரிக்கிறார்.

”அதன்பிறகு என்ன நடந்ததென எனக்கு தெரியவில்லை. தாம்பரம்-தாளம்பூர் சாலையில் என் வாகனத்தை நிறுத்திய சிலர் என்னை சரமாரியாக தாக்கினர். எனது பிரேஸ்லெட்டை கழற்ற முயற்சித்தனர். அது முடியாமல் போனபோது என் கைகளில் கடுமையாக தாக்கினர்.

நான் அவர்களிடம் போராடினேன். அதன்பின் என்னுடைய தலையை கடுமையாக தாக்கினர், பிறகு என்னுடைய செயின், மொபைல் போனை பறித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றனர். அதன் பிறகு நான் உதவிக்காக கத்தினேன். அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த டெம்போ ஓட்டுநர் ஒருவர் இச்சம்பவத்தை பார்த்து போலீஸிடம் புகார் அளித்தார்.”, என கூறினார் லாவண்யா.

“நானும் அவர்களை சும்மா விடாமல், அங்கிருந்த ஒருவரை தாக்கினேன் என்பது என் நினைவில் இருக்கிறது. 3 பேர் அப்போது இருந்தனர்.”.

“இந்த மாதிரியான தாக்குதல்கள் நடைபெறும்போது, அதை எதிர்த்து போராட நாம் வலிமையுடன் இருக்க வேண்டும். என் நண்பர்கள், உறவினர்கள், என் நலனுக்காக வேண்டிய தமிழ்நாடு மக்களுக்கு நன்றி. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் என்னை மருத்துவமனையில் வந்து பார்த்ததற்கு நன்றி. நான் வேகமாக குணமடைந்து வருகிறேன். 15 நாட்களில் மீண்டும் பணிக்கு திரும்புவேன்”, என கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close