பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஸ்டாலின் அறிக்கை

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய பா.ஜ.க., அரசுக்கு ’அதிமுக அரசு கொடுக்க வேண்டும் .

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய பா.ஜ.க., அரசுக்கு ‘குதிரை பேர’அதிமுக அரசு கொடுக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூரியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்டனர்.

குறிப்பாக, பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்த விதத்திலேயே சந்தேகங்களை எழுப்பி, அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. விசாரணை அதிகாரியே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் மேற்கண்டவர்களின் வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், சி.பி.ஐ., வழக்கை நிரூபித்த விஷயத்தில் சந்தேகங்களை எழுப்பி, “பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு கருணை காட்ட வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை, மாநில அதிமுக அரசு மத்திய அரசுடன் நடத்திய ‘கௌரவப் போட்டி’யின் காரணமாக நிலுவையில் உள்ளது. இவர்களை விடுதலை செய்வதற்கான முடிவினை எடுத்துவிட்டு மத்திய அரசுக்கு ‘கெடு’ விதித்து அனுமதிகோரியதால், மத்திய அரசின் சார்பில் அவசரமாக உச்சநீதிமன்றத்தை அணுகி அந்த விடுதலைக்கு தடை ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “மத்திய புலனாய்வு துறை விசாரித்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்” என்று தீர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், மீண்டும் தற்போதுள்ள மத்திய பா.ஜ.க., அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி கோரியிருக்கிறது அதிமுக அரசு. ஆனால் அந்த அனுமதியைப் பெறுவதற்கு எவ்வித தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அதிமுக அரசு மவுனமாக இருப்பதால், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையாக முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில்தான் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, அதுவும் மேல்முறையீட்டில் தண்டனையை உறுதி செய்த நீதிபதியே சம்பந்தப்பட்டவர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை அதிகாரியான தியாகராஜன் தாக்கல் செய்துள்ள மனு, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் அதிமுக அரசு இனியும் கால தாமதம் செய்யாமல் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கான அனுமதியை மீண்டும் பெற மத்திய அரசை உடனடியாக அணுக வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு கேட்டுள்ள அனுமதியை பெற்று பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் தண்டிக்கப்பட்ட நேரத்தில் இருந்த சூழலும், இப்போது அதே வழக்கை விசாரித்த அதிகாரி, தண்டித்த நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள சூழலும் அடிப்படையில் மாறுகிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக அரசு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கு போதிய அழுத்தத்தை மத்திய பா.ஜ.க., அரசுக்கு கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த தலைமை செயலாளர்கள் மத்திய அரசுக்கு இது தொடர்பாக எழுதிய கடிதங்களின் மீது தொடர் நடவடிக்கையை தனி கவனத்துடன் தலைமைச் செயலாளர் அவர்களும் எடுத்திட வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: We should pressure the central government to release the perarivalan

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com