முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று கடலூருக்கு வந்த இபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், 4.45 மணி அளவில் ரோடுஷோவாக சென்று மக்களை சந்தித்தார். அதன்பிறகு, சீமாட்டி சிக்னல் அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும்; திமுக ஆட்சியில் மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. இன்றைய சூழலில் யாரும் வீடு கட்ட முடியாது. வீடு கட்டுவதை போல் கனவு வேண்டுமானால் காணலாம். ஒரு யூனிட் ரூ.3 ஆயிரம் விற்ற எம்சாண்ட் ரூ.5,500ஆக விற்பனையாகிறது. அதிமுக ஆட்சியில் ரூ.50க்கு விற்ற சாப்பாட்டு அரிசி, இப்போது ரூ.77க்கு விற்பனையாகிறது. விலையை ஒப்பிட்டுப் பாருங்கள். எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என யோசித்து வாக்களியுங்கள். திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளில் திமுக அரசு ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகளை திமுக அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசு நிறுத்திய திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்துவோம். கரும்பு மற்றும் நெல் குவிண்டால் 2500 ரூபாய் கூறியபடி திமுக அரசு கொடுக்கவில்லை. விவசாயிகளை ஏமாற்றும் அரசு திமுக, எல்லா துறையிலும் கமிஷன் கலைக்க்ஷன் கரப்ஷன் என்று செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கடலூருக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக நிர்வாகிகள் சம்பத், சேவல்குமார் உட்பட அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் உட்லான்ஸ், அருகே சிலதுரம் ரோடு ஷோ மூலம் இ.பி.எஸ். மக்களைச் சந்தித்தார்.