இரட்டை இலையின் சக்தியை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம் என ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக அரசு சார்பில் மாவட்டம் வாரியாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று (25-ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் எம்.ஜி.ஆர். படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 24 புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். விழாவில் முதல்வர் பேசியதாவது:
இதுவரை 25 மாவட்டத்திலும் எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பொழுது நமக்கு இரட்டை இலை இல்லை, அது தேர்தல் ஆணையத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனக்கு முன்னால் இந்த மாவட்டத்தின் அமைச்சர் மணிகண்டன் குறிப்பிட்டதைப் போல இந்த மாவட்டம் எம்.ஜி.ஆருக்கும், அம்மாவுக்கும் ராசியான மாவட்டம் என்று சொன்னார். அந்த அடிப்படையில், அந்த இருபெரும் தலைவர்களுடைய ராசியான மாவட்டத்திலே நாங்கள் வருகின்றபொழுது, இரட்டை இலை சின்னத்தைப் பெற்று இந்த ராசி தெளிவுபடுத்தியிருக்கிறது.
பொதுமக்களும் இரட்டை இலையை ஏற்றி முகம் மலர்ச்சியைக் காட்டி, இந்த இரட்டை இலையை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்தமுடியாது. எம்.ஜி.ஆர் கண்டெடுத்த இரட்டை இலை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இரட்டை இலை, ஒன்றரை கோடி அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்களுடைய உயிர்மூச்சாக விளங்கக்கூடிய இரட்டை இலை நமக்கு கிடைத்திருக்கிறது என்பதை இந்த மாவட்ட மக்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள்.
இன்னும் சிலர் தெரிவிக்கின்றார்கள், இந்த இரட்டை இலை போனாலும் பரவாயில்லை, அதை நம்பி நாங்கள் இருக்கவில்லை என்று சொல்கிறார்கள், பிறகு ஏன் இவர்கள் போராட்டம் செய்யவேண்டும், விட்டு விடுங்களேன். ஆனால் அதற்கு மனமில்லை.
வேண்டுமென்றே திட்டமிட்டு, சதி செய்து, இந்த இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நம்முடைய எதிரிகளோடு கூட்டு சேர்ந்து, சதி செய்து, கழகத்தை அழிக்கப் பார்த்தார்கள், இந்த இரட்டை இலையை முடக்கப் பார்த்தார்கள். ஆனால் எல்லாம் வல்ல இறைவன் அருளால், மேலே இருந்து இருபெரும் தெய்வங்கள் நமக்கு அருளாசி வழங்கி, நல்ல தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கி நமக்கு இரட்டை இலையை தந்திருக்கிறது.
அம்மா, சட்டமன்றத்திலே பேசுகின்றபொழுது, எனக்குப் பின்னாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல நூறாண்டு காலம் இந்த ஆட்சி அதிகாரத்திலே நிலைத்து நிற்கும் என்று லட்சிய வார்த்தையை குறிப்பிட்டார்கள். அதை நிரூபிக்கின்ற விதத்திலே இன்றையதினம் தர்மத்திற்கு கிடைத்த வெற்றி, நீதிக்கு கிடைத்த வெற்றி, இந்த வெற்றியின் மூலம் நமக்கு இரட்டை இலை கிடைக்கப் பெற்றிருக்கிறது.
விரைவில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அம்மாவினுடைய கோட்டையாக விளங்குகின்ற தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலின் மூலமாக, இந்த இரட்டை இலைக்கு எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று நாம் நிரூபித்துக் காட்டுவோம்.
இருபெரும் தலைவர்களுடைய லட்சியத்தை நாம் செயல்படுத்துவோம், இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்குவோம், எதிரிகளை களத்திலே வீழ்த்துவோம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்திலே என்றைக்கும் ஆட்சி அதிகாரத்திலே இருக்கும் என்பதை தேர்தல் மூலமாக நிரூபித்துக் காட்டுவோம்.
இன்றைக்கு தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகின்றார். எங்கே சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது? இந்தியாவிலேயே அமைதிப்பூங்காவாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு மத்திய அரசோடு இணக்கமான சூழ்நிலை இருந்த காரணத்தினாலே, இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னைக்கு வந்தபோது, அவரிடத்திலே சென்று தமிழ்நாட்டிற்கு என்னென்ன தேவை என்ற பட்டியலை அளித்தோம், ஏற்கனவே கோரிக்கை மனுவும் கொடுத்திருந்தோம்.
மத்திய அரசோடு இணக்கமாக இருந்த காரணத்தினாலே, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களெல்லாம் மத்திய அரசுக்கு காவடி எடுக்கின்றார்கள், மத்திய அரசுக்கு அடிபணிந்து போகின்றார்கள் என்று சொல்கிறார்களே, அவர்களுடைய ஆட்சியிலே என்ன திட்டத்தை கொண்டு வந்தார்கள்? இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்கள்?
14 ஆண்டு காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்திலே இருந்தது தி.மு.க. , காங்கிரஸ் மந்திரிசபையிலே இடம் பெற்றது தி.மு.க., இந்த தமிழ்நாட்டுக்கென்று என்ன திட்டத்தை கொண்டுவந்தது தி.மு.க.? உருப்படியான எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அம்மாவினுடைய அரசு இன்றைக்கு பல்வேறு சாலைகளை சீர்செய்வதற்கு, தரம் உயர்த்துவதற்கு, அகலப்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.