”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்போ. அத்தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்கள் ஆதரவு கிடையாது”, என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக இன்று (செவ்வாய் கிழமை) தன் மனைவி பிரேமலதாவுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். ஏற்கனவே சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக விஜயகாந்த் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புறப்படும் முன்பு சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்போம். அத்தேர்தலில் எந்த கட்சிக்கும் தேமுதிக ஆதரவு கிடையாது. ஆர்.கே. நகரில் விதிக்கப்பட்ட பரப்புரை கட்டுப்பாடுகளை பணப்பட்டுவாடா செய்பவர்களே விமர்சிப்பார்கள்”, என தெரிவித்தார்.
மேலும், பணிநிரந்தரம்கோரி செவிலியர்கள் இரண்டு நாட்களாக நடத்திவரும் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இரண்டு நாட்கள் தொலைக்காட்சி பார்க்காததால் தனக்கு அதுகுறித்து ஏதும் தெரியாது என விஜயகாந்த் கூறினார்.
மேலும், மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது ஆட்சியின் அவல நிலையை காட்டுகிறது என குற்றம்சாட்டினார்.