Weather News Today: அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று புதுக்கோட்டை உள்பட தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை பெய்தது.
Advertisment
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் 11.30 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு: தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று குறிப்பிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யும். இதர மாவட்டங்களில் லேசான மழை இருக்கும். நவம்பர் 12 முதல் 15 வரை தமிழகத்தில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழியும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். வெப்ப நிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி வரை இருக்கும். இதற்கிடையே சென்னையில் காற்று மாசு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இது குறித்து கூறுகையில், ‘சில நாட்களாக கடல் காற்று இல்லாததால், காற்று மாசு தங்கிவிட்டது. இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.