Weather News , Chennai Weather Forecast: கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரியில், கன மழையால் தண்ணீர் வருகிறது. தமிழகத்தின், இரண்டாவது பெரிய ஏரியான இதை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், பார்வையிட்டார். ஏரிக்கரைப் பகுதி, மதகுகள் மற்றும் ஷட்டர், உபரி நீர் வெளியேற்றக்கூடிய கலங்கல் போன்றவற்றை ஆய்வு செய்த அவர், வெள்ள அபாயம் குறித்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தவிர, இன்று காலை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், அண்ணாநகர், அரும்பாக்கம், சேத்துபட்டு, ஸ்டெர்லிங்ரோடு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பெய்த மழை, காலை பொழுதை ரம்யமாக்கியது.
சேலத்தில் கோரிமேடு, கன்னங்குறிச்சி, ஏற்காடு பகுதிகளில் மிதமான மழை பெய்தது புதுக்கோட்டையில் ஆலங்குடி, கறம்பக்குடி, மணல்மேடு, அவுடையார், அரசர்குளம் பகுதிகளில் மழை பெய்தது
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பகுதிகளில் மழை பெய்தது
திருவண்ணாமலையில், போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் , நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், களக்காடு, பணகுடி, காவல்கிணறு, திசையன்விலை, ராதாபுரம் பகுதிகளில் மழை பெய்தது.
நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பரவலாக மழை பெய்தது
ராமநாதபுரத்தில், அதிகபட்சமாக 9 செ.மீ., ராமேஸ்வரத்தில் 8 செ.மீ., தேவிப்பட்டினத்தில் 7 செ.மீ., மழை பதிவாகியது.
‘3ம் பாலினத்தவர்’ என்றால் அஃறிணை உயிரினங்களா?’- திருநங்கைகள் கேள்வி
Chennai weather news :
சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, லட்சத்தீவுகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வெதர்மேன் தனது சமீபத்திய பதிவில், “தமிழகத்தின் உள்பகுதி மற்றும் டெல்டா பகுதிகளில் இரவு வரை மழை இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை நாளை காலை மழை இருக்கும். KTC பெல்ட்டில் அடுத்த மழை மீண்டும் டிசம்பர் 7 முதல் தொடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் , வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புல்புல் புயல் மேற்குவங்கம், ஓடிசா மாநிலங்களில் கரையை கடந்தது. இன்டியாவில் பத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதனால் இறந்தனர். மேலும், பல லட்சம் மக்களின் வாழ்க்கை இதனால் துயர் அடைந்தது. நிவாரண நிதியாக மத்திய அரசு தற்போது மேற்கு வங்கம், ஒடிசா மாநிலத்திற்கு ரூ.966.90 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக , வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியிருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வைகை ஆற்றில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள் .
மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த ம் மழையால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த நான்கு தினங்களில் மட்டும் 11.60 அடி அதிகரித்து 96.40 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர் கல்லணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் 14 ஆயிரத்து 784 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 105 அடியிலேயே நீடிப்பதால் அதிலிருந்து 11 ஆயிரத்து 900 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதே நேரத்தில் பவானி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தொடர்கிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 57 அடியில் தற்போது மஞ்சளாறு அணை 52.80 அடியாக உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு . ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது, சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, இந்தாண்டு 13 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் குன்னூரில் 13 செ.மீ மழையும், ராமநாதபுரத்தில் 9 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் இரண்டாவது நாளாக குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை, தென் சென்னை பகுதிக்கு பெரிய விருந்தே படைத்துள்ளது என்றே கூறிவிடலாம். மத்திய மற்றும் வட சென்னை பகுதிகளுக்கு அதிக மழையில்லை, அதேநேரம் ஏமாற்றவும் இல்லை என்ற நிலையே நிலவுகிறது. மழை தற்போது சிறிய இடைவேளை எடுத்துள்ளது. 7ம் தேதி கிழக்குபகுதியில் இருந்து வீசும் காற்றினால், சென்னைக்கு மழை வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குன்னூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைகை அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் வைகை ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்ப்டடுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் நள்ளிரவில் மரங்கள், பாறைகள் விழுந்தன. மரங்களை தீயணைப்பு துறையினர், பாறைகளை நெடுஞ்சாலை துறையினர் நள்ளிரவில், மழையை பொருட்படுத்தாமல் அகற்றினர். ராட்சத பாறையை அகற்ற முடியாததால், போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாற்று பாதையான கோத்தகிரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தொடர் மழை காரணமாக, தூத்துக்குடி, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.