weather chennai rain update chennai : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும், நாளையும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.அதேபோல், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாலையில் திடீரென நெல்லை மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளை, ராதாபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.