தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தினசரி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதே நேரத்தில் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் துல்லியமாக வானிலையை முன்னறிவித்து வருகிறார். தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், வட தமிழகத்தில் நவம்பர் 27-ம் தேதி வரை காலை வேளைகளில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்றும் குளிர்காலம் போல இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், கூறியிருப்பதாவது: நவம்பர் 27-ம் தேதி வரை காலை வேளைகளில் பனித்துளிகளை காணலாம். இது பனிக்காலம் போல் வறண்டு போவதும் குளிர்வதுமாக இருக்கும். குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் வட தமிழகப் பகுதிகளில் இந்த பனிப்பொழிவு மிகவும் வறண்டும் குளிர்ந்தும் இருக்கும். தென் தமிழகத்தில் உள்பகுதிகளில் ஈரப்பதம் கொண்ட காற்று வீசுவது சில நாட்களுக்கு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திங்கள்கிழமை (நவம்பர் 19) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-11-2024 முதல் 23-11-2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“