Tamilnadu Weather Updates: தமிழகத்தில் இன்றோடு அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருகிறது.
இதன் காரணமாக வெயிலின் தாக்கம் இனி சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 44.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் நேற்று மாலை 5.30 மணிக்கு தெரிவித்திருந்தது.
அடுத்ததாக வேலூரில் 43.2 டிகிரி செல்ஸியல் வெப்பமும், திருச்சி மற்றும் மதுரையில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும் பதிவாகியிருந்ததாக சென்னை வானிலை மைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மெதுவானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என நேற்றைய அறிவிப்பில் கூறியிருந்தது சென்னை வானிலை மையம்.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருப்பதாகவும், தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 6-10 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும், இன்று காலை 5.30 மணி அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
காலை 8.30 மணி அறிவிப்பின்படி, தென்மேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து, 6-12 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர, இன்றும் நாளையும் தமிழகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.