Tamil Nadu Weather Updates: தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி தொடங்கிய கத்தரி வெயில் மக்களை வாட்டி எடுக்கிறது.
சென்னை, வேலூர், திருச்சி போன்ற நகரங்களில் பொதுவாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவும் கத்தரி வெயில் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.
இந்த அக்னி நட்சத்திரம் முடியும் தருவாயில், மேலும் இரண்டு நாட்களுக்கு வெப்பக்காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசையில் இருந்து தமிழகத்திற்கு வீச வேண்டிய கடல் காற்று முழுமையாக வீசவில்லை. தற்போது தென் மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அதிக வெப்பம் பதிவாகி வருகிறது.
நேற்று மாலையின் படி, வேலூர் மற்றும் திருத்தணியில் 112 டிகிரி, திருச்சியில் 108, மதுரை 106, சேலம் 105, நெல்லை, நாமக்கல் 104, தருமபுரி 102, கோவை 101 என வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.
குறிப்பாக வேலூரில் கடந்த பத்தாண்டுகளில் மே மாதத்தில் பதிவாகியுள்ள அதிகளவு வெப்பநிலை இதுதான். அதோடு மே 29-க்கு மேல் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதில் குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் தமிழகத்தில் மற்ற நாட்களை விட 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வானிலை அறிக்கையில், “தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று அதிகமாக வீசும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
உள் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, மதுரை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று அதிகமாக இருக்கும். இங்கு வழக்கத்தை விட வெப்பம் 6 டிகிரி அதிகமாகும். எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்கலாம். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.