Chennai Weather News: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. கடந்த சில தினங்களாக மழையில்லாமல் இருந்த நிலையில், வார இறுதியான இன்று (டிசம்பர் 7) காலை பெய்த மழை நகர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Advertisment
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சென்னை அண்ணாநகர், அரும்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், மந்தைவெளி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தவிர, சென்னை வானிலை மையத்தின் காலை அறிவிப்பில், சென்னையில் வானம் பெரும்பாலும் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில குறிப்பிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கன மழையும், 6 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னை வெப்பநிலை மற்றும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு ஆகியவற்றையும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (டிசம்பர் 6) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரிக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
Advertisment
Advertisements
chennai weather forecast: இன்றைய வானிலை
நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை வாய்ப்பு இருக்கிறது. 40 முதல் 50 கிமீ வரை பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் குறிப்பிட்ட இடங்களில் வருகிற 10-ம் தேதி வரை குறிப்பிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை இருக்கலாம். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 25 டிகிரியாகவும் இருக்கும்.