ஐந்து மாவட்டங்களில் கனமழை; லிஸ்ட் இதோ - சென்னை வானிலை ஆய்வு மையம்
Latest Weather Report : சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை
Weather news today: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், "தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
அக்.1 முதல் இன்று வரை பதிவான மழை நிலவரம்:
தமிழ்நாடு முழுவதும் இந்தக் காலகட்டத்தில் 43 செ.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது. இது இயல்பை விட 6% அதிகம். சென்னையைப் பொறுத்தவரை இயல்பு அளவான 68 செ.மீ.க்கு 58 செ.மீ. மழை கிடைத்திருக்கிறது. இது 14% குறைவு. புதுவையில் இயல்பு அளவு 77 செ.மீ.க்கு 54 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது 30% குறைவு. வேலூர் மாவட்டத்தில் இயல்பு அளவு 33 செ.மீ.க்கு 25 செ.மீ. மழை தான் கிடைத்துள்ளது. இது 25% குறைவு".