weather rain update imd report : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் போதே எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை பெய்தது. அதன்பின் நிவர் புயல் தமிழகத்தை தாக்கியது. இதனால் வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான புரேவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று ராமநாதபுரம்- தூத்துக்குடி ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டுகிறது. நேற்று இரவு வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி-நகர், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”