தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்ற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்று தமிழகத்தின் கடலோர பகுதியிலும், ஒருசில மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை மற்றும் அதிகாலையில் லேசான பனி மூட்டம் காணப்படும். நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
நாளை மறுநாள் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 28ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி நகர உள்ளதால் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“