Weather Tamil News, Tamil Nadu New Cyclone Puravi: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழகத்தை நோக்கி நகருகிறது. இதனால் தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தத் தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற விவரத்தை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
நிவர் புயல், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு நல்ல மழை கொடுத்தது. இதைத் தொடர்ந்து வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின்படி, தெற்கு அந்தமான் கடல் பகுதி, அதையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடல், வங்கக் கடலின் பூமத்திய ரேகை பகுதி ஆகியன காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருக்கின்றன.
அடுத்த 48 மணி நேரத்தில் இவை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தொடர்ந்தே இது புயலாக மாறுமா? என்பது தெரியும். இது தென் தமிழக கடற்கரைப் பகுதியை நோக்கி நகருகிறது.
இதன் மூலமாக டிசம்பர் 1, 2, 3 ஆகிய தினங்களில் தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். உள் தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 4, 5 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"