Weather Tamil News: வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை விட்டிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிக்கை வருமாறு: ‘தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருவள்ளூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
Chennai Weather: இன்றைய வானிலை
சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 5 செ,மீ மழை பதிவாகியுள்ளது. பந்தலூர், அவலாஞ்சி பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகி உள்ளது.
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் ஆகஸ்டு 19-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். வடக்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்டு 19 முதல் 21-ம் தேதி வரை, தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்’
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"