Tamil Nadu Weatherman Warning: தமிழகத்தில் மலைத் தொடர் பகுதிகளில் மிக மிக அதிகமான மழை பெய்யப் போகிறது என்றும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடக் கடவுளே! அடக் கடவுளே! என்று தான் சொல்லத் தோன்றுகிறது. நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில், தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 820 மி.மீ மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. 24 மணி நேரமும் தமிழகத்தில் இவ்வளவு அளவிலான மழை பெய்ததில்லை. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
இந்த ஊர்களில் இன்னும் 4 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை
கேரளா, வால்பாறை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, இடுக்கி மற்றும் நெல்லை மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. குடகு மற்றும் வயநாட்டில் மிக மிக அதிகமான மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரப் போகிறது. கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகாவின் மலைத் தொடர்ச்சி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிக மிக கடுமையான மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு பெய்யப் போகிறது. மலைத்தொடர் பகுதிகளைச் சுற்றிலும் மிக அதிக மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.