தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மதுரை, திருச்சி, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்திலும் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது. அதே நேரத்தில், மழையும் பெய்து வருகிறது. கடந்தவாரம் முழுவதும் சென்னையில் பரவலாக கனமழை பெய்தது.
தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், செப்டம்பர் 28-ம் தேதி நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டதால், அடுத்து வடகிழக்கு பருவமழை எப்போது வரும், எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தென் மற்றும் வட மேற்கு மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, “வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு இன்று நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, தென்காசி, குமரி, மதுரை, சிவகங்கை, நாகை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களும், கொங்கு பகுதிகளுக்கும் இன்று நல்ல மழை பெய்வதற்கான ஹாட்ஸ்பாட் இடங்களாக உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வரும் செப். 29-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல நாளை (செப்டம்பர் 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அக்டோபர் 4, 5-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.