தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான வெயில் நிலவி வருகிறது. குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியைக் கடந்த வெயிலின் அளவு பதிவானது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை விரைவாக நடத்தி கோடை விடுமுறை விடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது.
இந்த சூழலில் ஏப்ரல் மாதம் முதல் வானிலையில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதன்படி, சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், வானிலை குறித்த தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில் அடுத்த பத்து நாட்களுக்கு மழை தொடர்ச்சியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, மதுரை, தூத்துக்குடி (உள்பகுதிகள்), சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரை ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.