வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து உள்ளது. இந்த காற்றழுத்த சுழற்சியாக கரையைக் கடக்கும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தால் மழைக்கு வாய்ப்பு குறைவு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதிப் ஜான் தனது முகநூல் பக்கத்தில், “காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை இழக்க தொடங்கி உள்ளது. உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம். கடலோர மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். டெல்டா மாவட்டங்களுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியை பார்க்கலாம். இதனால், மொத்தமாக மழை மேகங்கள் புதுச்சேரி - கடலூர்- மயிலாடுதுறை பெல்ட் நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் கனமழை பெய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காற்று கடலோர மாவட்டங்களை விட உள்மாவட்டங்களை நோக்கி நகர வாய்ப்புகள் உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கத் தொடங்கி உள்ளது. இது தற்போது மிக அதிகமாக பலவீனம் அடைந்துள்ளது. நிலத்திற்கு மிக அருகே வந்துள்ளதால் காற்று எளிமையாக உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கும் இடத்தை பொறுத்து இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைப் பொறுத்தவரை இன்று இரவு முதல் நாளை காலை வரை பல இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வானிலை குறித்து தெரிவித்துள்ள பிரதீப் ஜான், “அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, சென்னை வானிலை ஆய்வும் மையம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (14. 11.2024) அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.