சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிவடைந்து வி கே சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சசிகலா விடுதலையை வரவேற்கும் விதமாக, அஇஅதிமுக - வை வழிநடத்த வருகைத் தரும் பொதுச் செயலாளர் சசிகலா வருக! வாழ்க! வெல்க! என போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி அக்கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்தி அறிவிப்பில்:
"கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணிய ராஜா ( திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலலாளர்), கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" என அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் சில நாட்களில் வீடு திரும்புவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னதாக தெரிவித்தார் .
இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவகத்தின் அருகே ஜெயலலிதா நினைவிடத்தை முதலவர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், அஇஅதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைய அனைவரும் உறுதியேற்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியை அமைப்போம்; அஇஅதிமுகவின் வெற்றியை மாண்புமிகு அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.